ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர் அனுஜ் ராவத் மற்றும் கேப்டன் பாப் டூ பிளசிஸ் களமிறங்கினர். இதில், அனுஜ் ராவத் 4 ரன் எடுத்த நிலையில் அவுட்டாக அவரை அடுத்து வந்த விராட் கோலி ரன் எதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி பெங்களூரு அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழந்து வெளியேற பாப் டூ பிளசிஸ் மட்டும் தனி ஒருவனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்திருந்தது பெங்களூரு அணி. அதிகபட்சமாக பாப் டூ பிளசிஸ் 64 பந்துகளுக்கு 96 ரன்கள் விளாசியிருந்தார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பெங்களூரு அணி வீரர்கள் தங்களது பந்து வீச்சால் தொடக்கம் முதலே லக்னோ அணியை திணறடித்தனர். லக்னோ அணியில் அனைவரும் அடுத்துடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக க்ருணால் பாண்டியா மட்டும் 42 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் 30 ரன்களுக்குள் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.








