இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது. இதை சரிசெய்ய இலங்கை அரசும் பலகட்ட முயற்சிகள் எடுத்து வருகிறது. இதனிடையே இந்த விலை உயர்வை கண்டித்து அந்நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகவும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பல்வேறு நகரங்களில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில், கேகாலை மாவட்டம் ரம்புக்கனா பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரம்புக்கனா ரயில் பாதையை மறித்து மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவரை கலைக்க போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசியதை தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.







