ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் தேதி வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 14-வது தொடர், ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கியது. மே 2 ஆம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீரர்களின் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு, ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இந்தத் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தடைபட்டுள்ள எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி வரை போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் என்றும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.







