பிரபல திருக்கோயில் உள்ள நகரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் நாட்களில் சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி அப்பகுதி வணிக வளாகங்களில் தொடர் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக திருக்
கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கையை எண்ணும் நாட்களில் மர்மநபர்கள்
ஒவ்வொரு வணிக வளாகமாகச் சென்று கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவதாகக் கூறி 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை முன் பணத்தை பெற்றுக்கொண்டு சில்லறை தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், இன்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் ஆலயத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவதை அறிந்த மர்ம நபர் ஜங்ஷன் ரோட்டில் உள்ள உணவகத்தில் சில்லறை தருவதாகக் கூறி 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த உணவக உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து கையும் களவுமாக மர்ம நபரைப் பிடித்தனர். ஏற்கனவே சிசிடி பதிவில் உள்ள நபர்தான் என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்பட்ட மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இதுபோல் எத்தனை நபரிடம்
ஏமாற்றியுள்ளார். எந்தெந்த ஊரில் ஏமாற்றியுள்ளார் என விருத்தாசலம்
காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








