சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்த பின் முதலீட்டாளர்களின் முகவரி, தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. இதற்கிடையில் வெளிநாட்டு முதலீட்டை கவரும் வகையில் துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று 6000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு பெற்று வந்தார்.
இதுவரை ரூ.94,925 கோடி தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன என்றும் அதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாடு ரூ 1.25 இலட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், 74,898 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
ரூ.22,252 கோடி மதிப்பீட்டில் 17,654 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 21 நிறுவனங்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், ரூ.1,497 கோடி மதிப்பீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்பளிக்ககூடிய 12 நிறுவனங்களின் திட்டங்கள் தொடங்கி வைக்கபட உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி & மேம்பாட்டுக் கொள்கை 2022 அறிமுகப்படுத்தப்படுகின்றது. தமிழ்நாடு முதலீட்டுக் கள விழா, தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் இணையம், தமிழ்நாடு இன்ஃபோசிஸ் ஏற்றப்பலகை தொடங்கி வைக்கப்படுகின்றது. இதற்கு முன் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.








