நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று எதிர்கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார். மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி…

மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.

மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி உயர்த்தினார்.

இதையடுத்து, அரங்கேறிய பல்வேறு அரசியல் திருப்பங்களை அடுத்து, உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், பாஜகவுடன் சேர்ந்து முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே.

துணை முதலமைச்சராக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், ஷிண்டே அரசு மீதான வாக்கெடுப்பு சட்டசபையில் இன்று நடைபெறவுள்ளது.

முன்னதாக, சட்டசபையில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நடந்த தேர்தலில் சபாநாயகரான பாஜகவின் ராகுல் நர்வேக்கர் தேர்வு செய்யப்பட்டார். பாஜகவின் ராகுல் நர்வேக்கர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட நர்வேக்கர் நேற்றிரவு சிவசேனாவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக முதலமைச்சர் ஷிண்டேவை அறிவித்தார். மேலும் பரத் கோகவாலேவை சிவசேனாவின் தலைமைக் கொறடாவாக நியமித்ததையும் நர்வேக்கர் அங்கீகரித்தார்.

ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உத்தவ் தாக்கரே அணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், நாளுக்கு நாள் ஷிண்டே அணிக்கு ஆதரவு பெருகி வருவதால் புதிய அரசுக்கு எண்ணிக்கையில் பலன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்த பலம் 288 ஆகும். ஒரு எம்எல்ஏ காலமாகிவிட்டதால், தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. சபாநாயகர் தேர்தலில் பெரும்பான்மையை காட்டிலும் 20 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

எனவே நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஷிண்டே தரப்பு வெற்றி பெறும் என்று அரசியலை உற்றுநோக்கி வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.