அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவர் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தேசிய தரவு மைய மற்றும் கிளவுட் வரைவு கொள்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது,
மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இணையம் தவிர்க்க முடியாததாகி வருவதால், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிர, இணையவெளியை பாதுகாப்பானதாக்கவும் மத்திய அரசு மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்படுகிறது. மேலும் தரவு மைய கொள்கையின் (டேட்டா சென்டர் பாலிசி) பலன்களை விளக்கிய அவர், உலகம் அடுத்த தலைமுறைக்கு (கிளவுட் தலைமுறை) நகர்ந்து வரும் நிலையில், ஸ்டார்ட்-அப்களுக்கு பரந்த வாய்ப்பை இந்த கொள்கை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அளவு 2025-26-ல் 200 பில்லியன் டாலர்களிலிருந்து 1 டிரில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைநடைமுறைப்படுத்தப்பட்டவுடன், 3 லட்சம் கோடி முதலீட்டை இந்திய அரசு எதிர்பார்க்கிறது என்று தெரிவித்த அவர் ,தற்போது 80 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் படிப்பு முதல் வேலை, பொழுதுபோக்கு வரை பல்வேறு நோக்கங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்துவார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், இணைய பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு இந்திய அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.







