இந்தியாவிலேயே ஹாக்கி விளையாட்டிற்கென்றே குறிப்பிட்ட சில மாநிலங்களை அடையாளம் காண சொன்னால் பெறும்பாலானோர் திசை திரும்புவது ஒடிசா மாநிலத்தை நோக்கித் தான். அதற்கு முதல் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் 2023 ஒடிசாவில் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்திருப்பதே ஆகும். நவீன வசதிகளுடன் கூடிய, சர்வதேச தரத்திலான புதிய ஹாக்கி மைதானத்தை ரூர்கேலாவில் கட்டமைத்து, பிர்சா முண்டா மைதானம் என பெயர் சூட்டி, அதில் சிறப்பான முறையில் போட்டிகளையும் நடத்தி முடித்தது ஒடிசா மாநிலம்.
கடந்த 10 முதல் 15 வருடங்களாக ஹாக்கி விளையாட்டின் மீது தனி கவனம் செலுத்திவரும் ஒடிசா, இந்திய ஹாக்கி அணிக்கே ஸ்பான்சராக இருந்து வருவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரிந்திருந்தாலும் கூட, இந்தியாவில் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாவது முறையாக நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பை தொடர் என்பதை நாம் அறிவோமா?
இந்தியா விளையாட்டுத் துறையில் தொடர் வளர்ச்சி பெற்றுவரும் அதே நிலையில், ஒடிசா மட்டும் இளைஞர்களுக்கு ஹாக்கி மீதான தாக்கத்தை ஏற்படுத்தி, ஆடவர் , மகளிர் என இரு தரப்பிலிருந்தும் வீரர் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் பல மாஸ்டர் கிளாஸ் சாம்பியன்களை உருவாக்க வேண்டும் என்றே, தற்போது அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழக ஆட்சி, விளையாட்டு வீரர்களுக்கான புதிய திட்டங்கள் அறிமுகம் செய்தும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தும் தொடர் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு வெற்றிப் பயணம் தான் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்.
செஸ் ஒலிம்பியாட் தொடர், ஆசிய கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றாலும், இந்திய மண்ணில் இதுவே முதல் முறையாகும். முன்னதாக ரஷ்யாவில் நடைபெறவிருந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர், அப்போதைய ரஷ்யா, உக்ரைன் போரின் காரணமாக வேறு நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவிற்கு தகுந்தாற்போலேயே, செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பு குறித்து உலக செஸ் கூட்டமைப்பான பிடே ஆலோசனை செய்தது.
அந்த நேரத்தில் தான், ஒலிம்பியாட் போட்டிகளை குஜராத் மாநிலத்தில் நடத்த வேண்டி இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும், இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இந்த வாய்ப்பை கூடுதல் பொறுப்புடன் ஏற்ற தமிழ்நாடு அரசு, 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்பான முறையில் நடத்தி முடித்தது. சென்னையில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டி என்பதால், அரசு பள்ளி மாணவர்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேரில் அழைத்து வந்து போட்டிகளை கண்டுகளிக்க செய்தது தமிழ்நாடு அரசு.
இதுபோல் பிராண்டிங், ஒருங்கிணைப்பு, விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்திலுமே 5 ஸ்டார் ரேட்டிங்கில் போட்டிகளை நடத்தி முடித்திருந்த தமிழ்நாடு அரசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களின் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். எனவே வெற்றிகரமான செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை அடுத்து, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் சென்னையில் முதல் முறையாக நடத்தப்பட்டது. அதற்கு பின் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மாற்றம், அதனை தொடர்ந்து சமீபத்தில் ஆடவர் டென்னிஸ் தொடர் 3 ஆண்டுகளுக்கு பின்னதாக சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இது போல தொடர்ந்து சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைப்பெற்று வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், மற்றொரு பக்கம் வளார்ச்சியையும் நிலைநாட்டி வருகிறது.
அடுத்தப்படியாக தமிழகத்தில் எந்த மாதிரியான சர்வதேச விளையாட்டுப் போட்டி நடைபெறவிருக்கிறது என்ற எதிர்பார்பில் இருந்ததை அடுத்து, கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. கடந்த 2007 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருனாநிதி தலைமையில் சர்வதேச ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியானது சென்னையில் நடைபெற்றது.
பொதுவாகவே ஹாக்கி விளையாட்டில், வட மாநிலங்களுக்கு ஈடான வகையிலான ஒலிம்பியன்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. குறிப்பாக கோவில்பட்டி என்றாலே தமிழ்நாட்டின் ஹாக்கி பட்டறையாக விளங்குவது இந்தியாவில் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் இந்திய அணிக்காக விளையாடிய கார்த்திக் மற்றும் மாரீஸ்வரன் உள்ளிட்டோர் தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் பயிற்சி பெற்றவர்களே ஆவர். எனவே துவண்டு போன ஹாக்கி விளையாட்டை ஒடிசாவிற்கு இணையான வகையில் தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்ப்பிக்க செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் இறங்கியுள்ள தமிழ்நாடு அரசு.
அதன் முக்கிய வாய்ப்பாக வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் தேதி சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடைபெற்று இருந்தாலும், ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலோ நாத் சிங், தமிழ்நாடு விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடரின் சென்னை இணை ஒருங்கிணைப்பாளர் சேகர் ஜே மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலோ நாத் சிங் கூறுகையில், ஹாக்கி போட்டிகள் என்றாலே அது ஒடிசாவில் தான் நடைபெறும் என்று நினைத்து கொண்டிருக்கையில், அதனை உடைத்து தமிழ்நாட்டில் சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடத்த, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இனி நாங்களும் தொடர் ஒத்துழைப்பை நல்கி, தொடர்ந்து தமிழ்நாட்டில் சர்வதேச அஹாக்கி போட்டிகள் நடத்த அடுத்தடுத்து முயற்சிகளை தொடர்ந்து எடுப்போம் என பேசினார்.
இது தமிழ்நாட்டிற்கு கூடுதல் சாதகமான பேச்சாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அளவில் சர்வதேச ஹாக்கி போட்டிகள் என்றாலே அதன் ஒட்டுமொத்த வாய்ப்பு என்பது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஆர்வத்தால் தன்னகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஹாக்கியை பிரதிபலிக்க செய்ய, இந்த வாய்ப்பு நமக்கு அமைந்திருப்பது கூடுதல் சவாலான மற்றும் எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தல் பேரில் ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைக்கு நமது மாநிலத்தில் இருந்து துறை சார்ந்தவர்கள் சென்று பார்த்தோம். அப்போது தான் தமிழகத்தில் இதுபோல ஹாக்கி போட்டிகள் நடத்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆடவருக்கான ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் முதல் முறையாக இங்கே நடைபெறுகிறது என்பதை தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என பேசினார்.
இதில் தென் கொரியா, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கும் இதில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தாகாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை தொடரில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சரி, விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டாலும், போட்டிகளை துவங்கி வைப்பது குறித்த ஆலோசனைக்கு இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இத்தகைய அறிவிப்புகள் தமிழ்நாடு அரசின் சிறப்புக் குழு மூலமாக முதல்வரிடம் எடுத்து செல்லப்பட்டாலும், அதனை பரிசீலித்து, அதற்கு அனுமதி வழங்குவதோடு மட்டுமல்லாது, அதன் மீது தனி கவணம் செலுத்தி அதனை நடத்தி முடிக்க கோரி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின். எனவே இந்த போட்டிகளை தொடங்கி வைப்பது குறித்து அமைச்சர் உதயநிதியிடம் கேட்டப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே முதலமைச்சர் சார்பில் இந்த போட்டிகளை நேரம் இருந்தால் துவக்கி வைப்பார் என் கூறி இருப்பது கிட்டத்தட்ட இந்த போட்டிகளை முதல்வர் தொடங்கி வைப்பார் என்ற நிலையை உறுதி செய்திருக்கிறது.
இதற்கான நிதி எவ்வளாவு என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, இந்த ஹாக்கி தொடருக்காக இதற்கு பின்னர் தான் நிதி ஒதுக்கப்படவுள்ளது என பதில் அளித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போன்று இதனை தமிழ்நாடு மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி கவனம் செலுத்துவோம் எனவும் கூறினார்.
பொதுவாகவே சமீபகாலமாக, அரசியல் கட்சிகள் முதல், சாதாரன மக்கள் என அனைவரிடமும் எழும் கேள்வியானது, தமிழ்நாட்டில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது அல்லவா, அப்போ தமிழ்நாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு என்பது ஹாக்கி இந்தியா தேர்வுக் குழுவின் மூலம் அறிவிக்கப்படும் எனவும், அவர்களின் தகுதியை மையமாக வைத்தே அவர்களுக்கான வாய்ப்பு வழங்குவதை ஹாக்கி இந்தியா உறுதி செய்யும் எனவும் பதிலளித்தார்.
இறுதியாக அமைச்சர் உதயநிதியிடம், சர்வதேச அளவிலான அணிகள் சென்னையில் வந்து விளையாடும் போது, அவர்களுடன் நமது தமிழ்நாடு ஹாக்கி அணி இணைந்து ஒரு பயிற்சி ஆட்டம் ஏற்பாடு செய்யலாமா என கேட்க்கப்பட்ட கேள்விக்கு, “இந்த ஆலோசனை கூட நல்ல ஆலோசனை தான் என்ற விதத்தில்” சற்று சிந்தித்து விட்டு, நடத்தலாம் என பதிலளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அடுத்தடுத்து தமிழகத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை பயன்படுத்தி, தமிழக வீரர்கள் திறனை பயிற்சி ஆட்டங்களின் மூலம் வளர்த்துக்கொள்ளும் யோசனை கூட நல்ல யோசனை தான். இது போன்ற விளையாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்தால் மென்மேலும் தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் வளார்ச்சி பெற்று அடுதடுத்த முன்னெற்றங்களை அடையும் என்பதுல் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்று, ஆசிய போட்டிகளில் தடம் பதித்து, அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகிறது. அதற்கான தொடக்கப் புள்ளியாக தமிழக மண் வெற்றி வாய்பை பிரகாசமாக்க காத்திருக்கிறது.








