மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி ஆஜராக இடைக்கால தடை

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில்,…

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக  செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார், 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவு 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விசாரணைக்காக,  சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணையில் உள்ள 3 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை  விசாரித்த சிறப்பு நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரியும், அமலாக்கப் பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யபடாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் தீர்ப்பளித்தது.

மேலும், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.