பாஜகவில் வெளியானது புதிய நிர்வாகிகள் பட்டியல்

  அதிரடி மாற்றங்களுடன் வெளியானது பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்   பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக கடந்த ஆண்டில் அண்ணாமலை பொறுப்பேற்ற பின், 2 தேர்தல்களை கட்சி சந்தித்த…

 

அதிரடி மாற்றங்களுடன் வெளியானது பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்

 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக கடந்த ஆண்டில் அண்ணாமலை பொறுப்பேற்ற பின், 2 தேர்தல்களை கட்சி சந்தித்த நிலையில், கட்சியை வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த முடிவு செய்தார். அதன்படி சில தினங்களுக்கு முன்னதாக மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநில அளவிலான நிர்வாகிகளையும் அதிரடியாக மாற்றி புதிய பட்டியலை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.

 

அதன்படி, கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வந்த நயினார் நாகேந்திரன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நயினாரிடமிருந்த கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், அவர் பாஜகவின் சட்டமன்ற குழுத் தலைவராக தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கட்சியின் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம் மீது சில நாட்களாகவே, தலைமையிடம் அதிருப்தி நிலவிவந்த நிலையில், அவரும் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பெப்சி சிவக்குமார் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பாஜக ஊடகப்பிரிவு தலைவராக நீண்ட நாட்களாக இருந்துவந்த ஏ.என்.எஸ். பிரசாத், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ரங்கநாயகலு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பாஜக இளைஞரணி தலைவராக இருந்து வந்த வினோஜ் பி.செல்வத்துக்கு, மாநில செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்த கரு.நாகராஜன், மாநில செய்தித்தொடர்பாளராக இருந்து வந்த நாராயணன் திருப்பதி ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மாநில துணைத்தலைவர்களாக சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், நரேந்திரன் உள்ளிட்ட 11 பேரும், மாநில பொதுச்செயலாளர்களாக 5 பேரும், மாநில செயலாளர்களாக 13 பேரும், மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், மாநில இணை பொருளாளராக சிவசுப்பிரமணியனும், மாநில அலுவலக செயலாளராக சந்திரனும், 7 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளும், 3 பேர் மாநில செய்தித்தொடர்பாளர்களாகவும், மாநில தலைமை அலுவலக பொறுப்பாளராக லோகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதுதவிர 23 பிரிவுகளுக்கு புதிய தலைவர்களும், 39 பேர் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாகவும், 60 மாவட்டங்களுக்கு புதிதாக பார்வையாளர்களும், மாநில செயற்குழு உறுப்பினராக சென்னை சிவாவும், சென்னை மேற்கு மாவட்ட தலைவராக மனோகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

கட்சியில் மூத்த தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் உள்ள ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வதி, நமீதா, குஷ்பு, செந்தில் உள்ளிட்டோருக்கு புதிதாக மாநில அளவில் எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

 

நீண்ட இழுபறிக்குப் பின், தலைமையின் ஒப்புதலுடன் மாவட்ட, மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வருங்காலத்தில் கட்சியின் செயல்பாடுகள் எந்தளவில் இருக்கும், 2024 மக்களவைத் தேர்தலை கட்சி எவ்வாறு எதிர்கொள்ளும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.