வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டு கோயில் சிலைகளை மீட்டுக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனிடையே, இந்து அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், கோயிலில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன்படி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள தெப்பகுளம் மற்றும் தேரினை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டு கோயில் சிலைகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாகக் கூறினார். இதேபோல் தமிழ்நாட்டு கோயில்களுக்கு சொந்தமான நகைகள் மற்றும் சுவாமி சிலைகள் பிற மாநிலங்களில் உள்ளன எனவும் அவற்றையும் உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.







