ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடரை கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நல்ல தொடக்கம் தந்த மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச் இணை வெளியேற, ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹேடன் வால்ஷ் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயிலும், கேப்டன் நிகோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால், 14.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

38 பந்துகளில் 67 ரன்கள் விளாசிய கிறிஸ் கெயில் ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.