தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பொறுப்பு உளவுத்துறை ஐஜி செந்தில் வேலனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாததிற்கு காவல்துறை தலைமையக ஏடிஜிபி பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையாளராக இருந்த அருண் ஐபிஎஸ், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர், ஆவடி காவல் ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வெளிவந்ததும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல விஷயங்களில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.








