குஜராத்தில் சாலையில் வைர கற்கள் கிடப்பதாக பரவிய தகவலை நம்பி பொதுமக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரின் வரச்சா பகுதியில் வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் தவறுதலாக தெருவில் விழுந்து விட்டதாக தகவல் பரவியது. இவ்வாறு பரவிய தகவல் காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரவியது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தெருவில் கூடி சாலையை கூட்டிப் பெறுக்கி வைரக் கற்களை தேட ஆரம்பித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைதொடர்ந்து ஒரு சிலருக்கு வைரம் கிடைத்தது. ஆனால், அவை அமெரிக்க வைரங்கள் எனவும், கவரிங் நகைகள் மற்றும் சேலைகளில் அலங்காரம் செய்யப்படும் கற்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வைரத் தேடுதலில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை பார்க்கும்போது ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் கடைசி காட்சிகளில் மாணவர்கள் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக குவிந்தது போன்றதாக இருந்தது.







