அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்க…

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண், சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 2008 ஆண்டு விதிகளை மீறி சுங்கசாவடி உரிமையாளர் செயல்படுவதாகவும் சுங்கசாவடியை கடக்கும் அரசு பேருந்துகளை முழு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கபடுத்துவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கசாவடிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், அதற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயம் என விதிகளில் உள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

ஆனால் இதுவரை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்பதால் தற்போது சுங்க கட்டணம் வசூலிக்க முடியாது என தெரிவித்தார்.

மத்திய அரசின் சாலை போக்குவரத்து கழக சட்டம் 1950 கீழ் அரசு பேருந்து போக்குவரத்து என்பது வணிக ரீதியான போக்குவரத்து இல்லை என்றும் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு கிராம புற மக்களுக்கும் சேவையை வழங்கி வருகிறது என்றும் அவர் வாதிட்டார்.
எனவே சுங்க சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தப் படி அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூல் நடைமுறையில் இருந்து விதி விலக்கு அளிக்க முடியாது என்றும் அந்தந்த சுங்க சாவடி கட்டணங்களை அரசு பேருந்துகள் செலுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 21 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.