மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 14.23% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த 16 ஆண்டுகளை விட அதிகமாகும்.
வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனிமம், எரிபொருள், மின்சாரம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் தொடர்ச்சியான விலையுயர்வு காரணமாக இந்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் விகிதம் 12.54% ஆக இருந்தது. மட்டுமல்லாது கடந்த 8 மாதங்களாக இந்தியா இரட்டை இலக்கத்தில் பணவீகத்தை கொண்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்த பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பானது இந்த பணவீக்க நிலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யதார்த்தம் அப்படியாக இல்லை.
எரிபொருள் மொத்த விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபரில் 37.18%ஆக இருந்த இந்த விலையானது நவம்பரில் 39.81%ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் உற்பத்தி பொருட்களின் விலையானது 11.92 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் இந்த விலை 12.04% ஆக இருந்தது.
அதேபோல உணவு பொருட்களின் மொத்த விலையானது 6.7% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த மாதம் 3.06% ஆக இருந்தது. கடந்த மாதம் அக்டோபரில் 80.57%ஆக இருந்த கச்சா பெட்ரோலிய பணவீக்கம் நவம்பரில், 91.74%ஆக அதிகரித்துள்ளது.
மொத்த மற்றும் சில்லரை விற்பனைக்கு இடையிலான விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த மாதங்களில் பெரிதும் வேறுபட்டிருக்கிறது என மத்தி அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.








