இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க புதிய தொழில்நுட்பத்தில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ரயில்வேவுக்காக 140 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வந்தன. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து, ரயில் சேவையை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி, இந்தியாவில் ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயிலை இன்று கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018ஆம் ஆண்டு இயக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 8 பயணிகள் பெட்டிகள், 2 பைலட் பெட்டிகளுடன் உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயில் இந்தியாவில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ரயில்வே, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் பல துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மக்களின் மத்தியில் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்திட்டங்கள் மக்களின், குறிப்பாக நமது ‘யுவ சக்தி’யின் (இளைஞர் சக்தியின்) வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று பதிவிட்டுள்ளார்.




