இந்தியாவில் முதல் முதலாக கொரோனா பாதிக்கப்பட்ட கேரள மாணவிக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால், உயிரிழந் தோர் எண்ணிக்கை, வரலாறு காணாத அளவில் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று முழுமையாக நீங்கி விடவில்லை.
தற்போது கொரோனா பரவலின் மூன்றாவது அலை வர இருப்பதாகவும் ஏற்கனவே அது தொடங்கிவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில், முதன் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட மருத்துவ மாணவிக்கு மீண்டும் தொற்று உறுதியாகி இருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 21 வயது மாணவி, சீனாவின் வூஹானில் மருத்துவம் படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அவர் நாடு திரும்பியபோது நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் முதன் முதலாக கொரோனா பாதிக்கப்பட்டவர் அவர்தான். பின்னர் ஒரு மாத சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார்.
அவர் இப்போது புது டெல்லிக்கு செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக அவருக்கு கொரோ னா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அறிகுறிகள் இல்லையென்றாலும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த மாணவியை, திருச்சூர் மாவட்ட மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த மாணவி இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.







