பிரிட்டனுக்குச் சென்று பணியாற்றுவதற்கும் உயா்கல்வி பெறுவதற்கும் நுழைவு விசாவை பெறுவதில் இந்தியா்களே முதலிடம் வகிப்பதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது.
பிரிட்டன் விசாக்களை கடந்த மாா்ச் 31-ம் தேதி வரையிலான ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் பெறும் வெளிநாட்டவா்கள் குறித்த விவரங்களை பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரப் பணியாளா்கள், திறன்மிக்க பணியாளா்கள் உள்ளிட்டவா்களுக்கான விசாக்களைப் பெறுவதில் இந்தியா்கள் முன்னிலையில் உள்ளனா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உயா்கல்வி பெறுவதற்காக வெளிநாட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் 41% இந்திய மாணவா்களே பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பணியாளா்களுக்கான விசாக்களில் 33% இந்தியா்கள் பெற்றுள்ளனா்.
கடந்த ஆண்டில் வெளிநாட்டு மாணவா்களுக்கு 92,951 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2021-22-ம் நிதியாண்டில் பணியாளா் விசா பெற்ற இந்தியா்களின் எண்ணிக்கை 13,390 ஆக இருந்த நிலையில், 2022-23-ஆம் நிதியாண்டில் அந்த எண்ணிக்கை 21,837 ஆக அதிகரித்துள்ளது.
அதே காலகட்டத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கான விசாக்களைப் பெறும் இந்தியா்களின் எண்ணிக்கை 14,485-ல் இருந்து 29,726 ஆக அதிகரித்துள்ளது. இது 105% அதிகரிப்பாகும். கடந்த 2019-ம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் பிரிட்டன் விசா பெற்ற இந்திய மாணவா்களின் எண்ணிக்கை சுமாா் 7 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் விசா வைத்துள்ளவா்களைச் சாா்ந்து வசிக்கும் வெளிநாட்டவா்களின் எண்ணிக்கையில் நைஜீரியா முதலிடம் வகிக்கிறது. அவ்வாறு 66,796 நைஜீரியா்கள் பிரிட்டனில் வசித்து வருகின்றனா். அந்தப் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. பிரிட்டன் விசா வைத்துள்ள இந்தியா்களை சாா்ந்து 42,381 போ் அந்நாட்டில் வசித்து வருகின்றனா்.
பிரிட்டனுக்கான நிகர இடம்பெயா்வு கடந்த நிதியாண்டில் 6,06,000 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5,04,000 ஆக இருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பணியாளா்களும், மாணவா்களும் பிரிட்டனுக்கு இடம்பெயா்ந்ததன் காரணமாக நிகர இடம்பெயா்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.