ஃபேஸ்புக் காதலனை சந்திக்க எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

ஃபேஸ்புக் காதலனை சந்திப்பதற்காக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் ஜெய்ப்பூர் செல்வதாக தன் கணவரிடம் கூறி விட்டு, பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நாடுவிட்டு…

ஃபேஸ்புக் காதலனை சந்திப்பதற்காக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் ஜெய்ப்பூர் செல்வதாக தன் கணவரிடம் கூறி விட்டு, பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நாடுவிட்டு நாடு காதலிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, அந்த காதலர்களை சந்திப்பதற்காக நாடுவிட்டு நாடு செல்லும் சம்பவங்கள் தற்போது அதிகமாக அரங்கேறி வருகின்றன.

சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது சோஷியல் மீடியா மூலமாக அறிமுகமான காதலனைப் பார்க்க தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்து அவரை கரம் பிடித்தார். எனினும், சட்டவிரோதமாக நுழைந்ததற்காக சீமாவும், அவருக்கு சட்டவிரோதமாக அடைக்கலம் அளித்ததற்காக அவரின் காதலரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். அவா்களிடம் தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்தது அது ட்ரெண்டிங் ஆகி அடங்குவதற்குள் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது சோஷியல் மீடியா காதலனைத் தேடி சட்டப்படி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் சென்றிருக்கிறார். அதுவும் நுழைவு இசைவு அதாவது விசா பெற்று சென்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் வசித்து வருபவர் 34 வயதான அஞ்சு. இவர் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தைச் சோ்ந்த 29 வயதான நஸ்ருல்லா என்பவருடன் ஃபேஸ்புக் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன் குடும்பத்தினரைவிட்டு, நஸ்ருல்லாவைக் காண்பதற்காக கடந்த 20-ஆம் தேதி முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றாா். அங்கு அவா் நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கியுள்ளாா்.

அப்போது அவரிடம் அப்பா்டிா் மாவட்ட காவல் துறையினா் விரிவாக விசாரணை நடத்தி, அஞ்சுவிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதாகத் தெரிவித்த அவர்கள், தன் காதலனைக் சந்திப்பதற்காகவே பாகிஸ்தான் வந்துள்ளதாகத் தெரிவித்தனா். எனினும், இதனை முழுமையாக மறுத்து, இருவரும் நட்புடனே பழகி வருவதாகத் தெரிவித்த நஸ்ருல்லா ஆகஸ்ட் 20-ஆம் தேதி விசா காலம் முடிந்தவுடன் அஞ்சு இந்தியா திரும்புவாா் என கூறியுள்ளார்.

அஞ்சு பாகிஸ்தான் சென்றிருக்கிறார் என்ற தகவல் மீடியா மூலம் வெளியானவுடன், ராஜஸ்தான் போலீஸார் அஞ்சுவின் வீட்டுக்குச் சென்று அவரின் கணவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அஞ்சு செவ்வாய்க்கிழமை தன்னுடைய கணவரிடம் ஜெய்ப்பூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. அஞ்சுவுக்கும் அவரின் கணவருக்கும் 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அஞ்சுவின் கணவர் தெரிவிக்கையில், என் மனைவி ஆன்லைனில் பேசிப் பழகி வந்தது எனக்குத் தெரியாது’’ என் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.