உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள் தங்களது கல்வியை தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடர ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் ரஷ்யத் தூதரகத்தின் துணைத் தலைவர் ரோமன் பபுஷ்கின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போரால், மருத்துவக் கல்வியை பாதியில் கைவிட்டு இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அந்த மாணவர்களை எங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. எங்கள் நாட்டு பல்கலைக்கழகங்கள் அந்த மாணவர்களின் கடந்த ஆண்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். தங்கள் கல்வியை இந்திய மாணவர்கள் தொடரலாம் என்று அந்த அறிக்கையில் ரோமன் பபுஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இன்னமும் போர் முடிவுக்கு வரவில்லை. 100 நாட்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறிய 20,000 மாணவர்கள் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ரஷ்ய தூதரகம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்








