இங்கிலாந்து பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்

இங்கிலாந்தில் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியதையடுத்து, நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார்.   இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, புதிதாக பொறுப்பேற்ற பிரதமர்…

இங்கிலாந்தில் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியதையடுத்து, நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார்.

 

இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார். பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் தனது பிரதமர் பதவியை திறந்தார். இதையடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சியில் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

 

இந்நிலையில், லிஸ் டிரஸ் பதவி விலகியதும், அவருடன் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மீது அனைவரது பார்வையும் திரும்பியது. இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவார் என பலதரப்பினரும் எதிர்ப்பார்த்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது.


கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தலைவர் தேர்தலில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், பென்னி மோர்டாண்ட் ஆகியோர் ஆர்வம் காட்டினர். இதில், போரிஸ் ஜான்சன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இருமுனைப் போட்டியானது. ரிஷி சுனக், பென்னி மர்டாண்ட் ஆகியோருக்கு இடையிலான போட்டியில், கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ரிஷி சுனக்குக்கு ஆதரவு அளித்தனர். இதனால், அவர் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து, போட்டியில் இருந்து விலகுவதாக பென்னி மர்டாண்ட் அறிவித்தார். இதையடுத்து, இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். இதனால், இங்கிலாந்தில் முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இங்கிலாந்து இளவரசர் 3-ம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக நியமனம் செய்தவுடன் அவர் பொறுப்பேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ரிஷி சுனக் இன்போஸிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.