ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி! 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அசத்தல்!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற போட்டியில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்திய ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கிய 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில்…

சென்னை எழும்பூரில் நடைபெற்ற போட்டியில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்திய ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கிய 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று வரை நடைபெற்றது. சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடின.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவுடன் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய நிலையில், நேற்றுடன் அரை இறுதி சுற்று முடிவடைந்தது.

அரை இறுதிச் சுற்றில், இந்தியா – ஜப்பான் அணி மோதியது. அதில் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே இந்தியா வெற்றிப் பாதையை நோக்கி பயணித்தது. பின், ஜப்பானை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல், திறமையாக செயல்பட்டு 5 – 0 என்ற கணக்கில் இந்தியா இறுதி போட்டிக்கு நுழைந்தது.அதேபோல், மலேசியா – தென்கொரியா அணிகள் அரை இறுதி போட்டியில் மோதியததில், முதலில் மலேசியா அணிக்கு டஃப் கொடுத்தது கொரியா அணி. பிறகு பொறுமையாக பதிலடி கொடுத்து, மலேசியா அணி கோல்களை பறக்க விட்டது. அதில் 6 – 2 என்ற கோல் கணக்கில் மலேசியா வென்றது.

இந்நிலையில் இன்று இந்திய அணியும், மலேசிய அணியும் மோதும் இறுதி ஆட்டத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைத்தனர். ஆட்ட தொடங்கியது முதலே விருவிருப்புக்கு பஞ்சமில்லாமல் இரு அணிகளும் விளையாடி வந்த நிலையில் முதல் பாதியில் மலேசிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் வெகுண்டு எழுந்த இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு ஒரு கட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. இந்நிலையில் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வரும் அளவுக்கு ஆட்டம் சூடு பிடித்தது. இறுதி நேரத்தில் இந்திய அணி நான்காவது கோலை அடித்து அசத்தியது. இதன் மூலம்  4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4 ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.