இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பெரிய இசை கச்சேரிகள் நடத்துவதற்கு ஏதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமையவுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
“மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில், சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், மழை காரணமாக இந்த கச்சேரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இசை கச்சேரி நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், ரசிகர்களின் பாதுகாப்பு கருதி இசை கச்சேரி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இசை கச்சேரி ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிலும் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சென்னை வந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர். இது தொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்து அசுவாசப்படுத்தியிருந்தார்.
மேலும், சர்வதேச அளவிலான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு கட்டமைப்புகளை சென்னையில் உருவாக்க வேண்டும் என இசையமைப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டதாவது:
பெரிய இசை கச்சேரிகள் நடத்துவதற்கு ஏதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமையவுள்ளது. இது பெரிய அளவிலான கச்சேரிகள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் இருக்கும். மேலும் ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் இடங்கள் மற்றும் சிறந்த போக்குவரத்து இணைப்புடன் இது நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக இருக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.







