இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய மக்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி கடந்த 24 மணிநேரத்தில் 3,52,991 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,812 பேர் கொரோனாவுக்கு பலியாகியும், 2,19,272 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தும் உள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சமும் உள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா “கடுமையான போராட்டம்” இன்னும் முடிவடையவில்லை, நாம் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எச்சரித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நம் கையில் இன்னும் கடுமையான போராட்டம் உள்ளது. நாம் அனைவரும் நம் நிலையில் இருந்து தாழ்ந்து போகாமல் விதிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டுதலையும் கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் அணியுங்கள், சானடைசர் உபயோகியுங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பல ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நாதன் கவுல்டர் நைல் கொரோனா பரவல் தொடர்ந்தாலும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தொடர்ந்து பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள ஆடம் ஜாம்பாவும், கேன் ரிச்சர்ட்சனும் தங்களது சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாதன் கவுல்டர் நைல் பயோ பபுளில் இருப்பது பாதுக்காப்பானது என்றும், அதற்கான நெறிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த தொடரில் சரியாக பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அஸ்வின் கொரோனாவுக்கு எதிராக போராடும் தனது குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதால் இந்த தொடரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







