இந்தியன் 2 பட சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்பே இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் போன்றவை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.
ஜெயமோகன் எழுத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கின்றனர். காஜல் அகர்வால், சமுத்திரகனி, பாபிசிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். இந்தியன் 2 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை, பீஹார், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்கு இதன் படப்பிடிப்பு சென்னையில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சி குழுவினருடன் கமல்ஹாசன் இருக்கும் படம் சமூகவலைதளங்களில் வைரலானது.
சண்டைக் காட்சிகள் உலக தரத்தில் இருப்பதற்காக வெளிநாட்டில் இருந்து சண்டை பயிற்சி நிபுணர்களை நியமித்துள்ளனர். இந்நிலையில் ரயிலில் பிரமாண்ட சண்டைக் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் தென்னாப்பிரிக்கா பயணம் செய்ய உள்ளனர். அங்கு சுமார் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-ம.பவித்ரா








