மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.இதனால் அந்த அணி 23 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 19 , பாண்ட்யா 5 , ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 46 பந்தில் ஒரு சிக்சர், 7 பவுண்டரி உள்பட அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 16 ரன்னும், ரோகித் சர்மா 12 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது.







