இளைஞர்கள் தங்கள் பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகளை, நூல்களாக எழுத வேண்டும் என்று, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று, பிரதமர் மோடி, வானொலியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம், இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும், நாட்டு மக்களுக்கு விரைவாக, தடுப்பூசி செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
குடியரசு தினத்தன்று, தேசிய கொடி அவமதிக்கப்பட்டதைக் கண்டு, நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் அவர் கூறினார். நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இளைஞர்கள் தங்கள் பகுதியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட நிகழ்வுகளை, நூல்களாக எழுத வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.







