முக்கியச் செய்திகள் விளையாட்டு

தவான் அசத்தல் – இந்திய அணி த்ரில் வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியுடனான வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். நேற்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தவான் மற்றும் கில் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தவான் 99 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஒரு தொடக்க ஆட்டக்காரர் ஹோப் 7 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரரான கய்ல் மயர்ஸ் மறுமுனையில் சிறப்பாக ஆடினார். அவருக்கு ப்ரூக்ஸ் மற்றும் கிங் ஆகிய வீரர்கள் துணை நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தாலும்,மறுபக்கம் ரன்களும் வேகமாக வந்து கொண்டிருந்தன.

கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டன. சிராஜ் பந்துவீசினார். அந்த அணியின் ரொமரியோ சப்பர்ட் சிறப்பாகவே ஆடினார். கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டன. சிக்ஸர் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் தவான், “ரன்கள் வந்தாலும் சதம் தவறவிட்டதில் கொஞ்சம் வருத்தம் தான். எங்களது மிடில் ஆர்டர் சற்று அனுபவம் இல்லாதவர்கள் என்பதால், நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் தொடக்க வீரர்களுக்கு இருந்தது. அதைத்தான் செய்தோம். வருகின்ற போட்டிகளில் அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்தி களமிறங்குவோம்.” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram