முக்கியச் செய்திகள் விளையாட்டு

நியூசி.க்கு எதிரான 2 வது டெஸ்ட்: இந்திய அணி அசத்தல் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்றன. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், இரு இடையிலான, 2-வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 150 ரன்களும் அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் பத்து விக்கெட் சாய்த்து சாதனைப் படைத்தார்.

அஜாஸ் பட்டேல்

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக வைத்துள்ளது. அடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டாம் லாதம் (6), வில் யங் (20), ராஸ் டெய்லர் (6) ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி இருந்தார். டேரில் மிட்செலை (60) அக்சர் படேல், அவுட் ஆக்கினார். டாம் பிளண்டெல் ரன் அவுட் ஆனார். ஹென்றி நிக்கோலஸ் 36 ரன்களுடன் ரச்சின் ரவிந்திரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இந்திய அணி வெற்றி பெற்றது. ஜெயந்த் யாதவ் இன்று காலையில், கடைசி கட்ட வீரர்கள் 4 பேரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். அஸ்வின் கடைசி விக்கெட்டை சாய்க்க, நியூசிலாந்து அணி 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி   372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் ஜெயந்த் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அக்சர் படேல் ஒரு விக்கெட்டை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா பாதிப்பு

Halley Karthik

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Halley Karthik

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளியுடன் வெற்றிக் கணக்கை தொடங்கியது இந்தியா

Halley Karthik