இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று மும்பை வந்த பிரதமர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவரும் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவும் வந்தனர்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,”பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். நவீன எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் சார்ந்த பாதுகாப்பை பலப்படுத்த முழு அர்ப்பணிப்புடன் நாங்கள் உள்ளோம். உக்ரைன், காசா விவகாரங்களில் அமைதியை திரும்ப கொண்டு வர மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்,” என்றார்.







