அருணாச்சலப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டி “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” என்று பெயரிட்டு வரைபடம் வெளியிட்ட சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் உள்துறை அமைச்சகம் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் விதமாக, அப்பகுதியில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய, பின்யின் மொழிகளில் பெயர் சூட்டி வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும் இந்த புதிய பகுதிகள் “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” பகுதியின் கீழ் வருவதாக சீனா அதில் குறிப்பிட்டிருந்தது. இதில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள், இரண்டு ஆறுகள் போன்ற முக்கிய பகுதிகள் அடங்கும்.
இதற்கு முன் 2017ஆம் ஆண்டில், சீனா இதே போன்று அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி பட்டியலை வெளியிட்டதோடு, பின்னர் 2021ஆம் ஆண்டிலும் 15 இடங்களின் புதிய பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் மூன்றாவது முறையாகும்.
சீனாவின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மத்திய வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளரர் அரிந்தம் பாக்சி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அத்தகைய செய்திகளை நாங்களும் பார்த்தோம். இத்தகைய முயற்சியை சீனா மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது, தொடர்ந்து இருக்கும். சீனாவால் புதிதாக உருவாக்கப்பட்ட பெயர்களை வழங்குவதற்கான முயற்சிகள் உண்மையை என்றும் மாற்றாது ”என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








