2021ம் ஆண்டுக்கான சர்வதேச சுற்றுலா வளர்ச்சியில் இந்தியா 54வது இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சர்வதேச அளவில் சுற்றுலா முடங்கிப் போன நிலையில், தற்போது அது மெல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில் 2021ம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாவின் நிலை குறித்து 117 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட உலக பொருளாதார அமைப்பு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒட்டுமொத்த அளவில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், ஸ்பெயின் மூன்றாம் இடத்திலும், பிரான்ஸ் 4ம் இடத்திலும், ஜெர்மனி 5ம் இடத்திலும் உள்ளன.
6 முதல் 10 வரையிலான இடங்களில் முறையே ஸ்விட்சர்லாண்டு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 54வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், தெற்காசிய நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.
நமது அண்டை நாடான இலங்கை 74வது இடத்திலும், பாகிஸ்தான் 83வது இடத்திலும், பங்களாதேஷ் 100வது இடத்திலும், நேபாளம் 102வது இடத்திலும் உள்ளன. அதேநேரத்தில் சீனா 12வது இடத்தில் உள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து சர்வதேச சுற்றுலா மீண்டு வருவதாக தெரிவித்துள்ள உலக பொருளாதார அமைப்பு, எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை நீடித்த வளர்ச்சியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.










