தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்கவில்லை என்றால் அந்த வாய்ப்பை வடமாநிலத்தவர்கள் பயன்படுத்தி பணியில் சேர்ந்துவிடுவார்கள் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள நெடுங்குன்றத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பா.ஜ.க.-வை விமர்சனம் செய்தது மாபெரும் தவறு என சுட்டிக்காட்டினார். இந்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் கேட்டு விட்டு பேசினாரா? என அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தடுக்கும் பொருட்டு பாஜக முன்னெடுப்பு பணிகளை செய்து வருகிறது. இது முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு தெரியாதா? என்றும் கரு.நாகராஜன் கேள்வி எழுப்பினார். தேசிய அளவில் போட்டி தேர்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்பவர்களுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்ற அவர், தபால் துறை, ரயில்வே காலசி போன்ற பணிகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை என்றார்.
அதுபோல் தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்பதில்லை, இதனால் ஒருவரும் பணியில் இல்லை என கூறினாலும் ஆச்சர்ய படுவதில் ஒன்றுமில்லை என தெரிவித்தார். போட்டி தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் கலந்துகொண்டால் தானே வாய்ப்பு கிடைக்கும் என்ற அவர், இல்லை என்றால் வடமாநில இளைஞர்கள் தான் அந்த பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். பேட்டியின் போது, செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க தலைவர் வேதசுபிரமணியம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
– இரா.நம்பிராஜன்








