முக்கியச் செய்திகள் தமிழகம்

“உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது” – மத்திய அமைச்சர்

கொரோனாவிற்கு பிறகு உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வேர்பேட்டை மியூசிக் அகாடமியில் துக்ளக் வார இதழின் 52ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குழுமூர்த்தி, “திராவிட மாடல் ஆட்சியில் மது ஒரு அங்கம், குடிக்காத தலைமுறையை குடிக்கும் தலைமுறையாக மாற்றியது திராவிட மாடல்தான்” என குற்றம் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எழுவர் விடுதலையில் 30 வருடம் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து தவறானது. எழுவர் விடுதலை போல் பலரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கூடி போராட்டம் நடத்தினால் நீதிமன்றம் என்ன செய்யும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “பயங்கரவாதத்தை தடுத்து அழிக்க முடியும் என்றால் அது நரேந்திர மோடியால்தான் முடியும். முத்தலாக் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதனால் முஸ்லீம் பெண்கள் மோடிக்கு வாக்களித்தனர்” என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இரண்டாவது முறையாக பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற கட்சி பாஜக. இது பணக்கார்கள் கட்சி, உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி, இந்திகாரன் கட்சி என தமிழ்நாட்டில் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதை மறுத்து நிமிர்ந்து பதில் சொல்லும் பலத்திற்கு பாஜக வளர்ந்துள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனாவிற்கு பிறகு உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. நீரவ் மோடி, மல்லையா உள்ளிட்டோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு அந்த பணம் வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு தற்போது லாபம் வர தொடங்கியுள்ளது.” என்று கூறிய அவர்

“நாட்டை உடைக்கும் சக்திகளோடு இன்று காங்கிரஸ் நிற்கிறது. குடும்ப அரசியல் செய்து வருவதுடன், அதை காங்கிரஸ் ஆதரித்தும் வருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சியின் தேவை இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தேவை இல்லை” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் வழக்கமாக பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து வரிகளுடன் கூடுதலாக வரிகள் சேர்த்து பாடப்பட்டது. திமுகவால் எடிட் செய்யப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என துக்ளக் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

Ezhilarasan

கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

Gayathri Venkatesan

காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்

Gayathri Venkatesan