இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுல் நேற்று அடித்த சதத்தை, ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் காயமடைந்த ஷர்துல் தாகூருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா
சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டேன் லாரன்ஸ், ஜாக் கிராவ்லி, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு பதிலாக ஹசீப் ஹமீத், மொயீன் அலி, மார்க்வுட் இடம் பிடித்தனர்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்கோர் 46 ரன்னாக இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்தபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் ராகுலுடன், கேப்டன் விராத் கோலி கைகோர்த்தார்.
இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ராகுல், தனது 6-வது
சதத்தை நிறைவு செய்தார். ஸ்கோர் 267 ரன்னாக இருந்தபோது விராத் கோலி 42
ரன்களில் ஆட்டமிழந்தார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 276
ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 127 ரன்களுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில்
இருந்தனர். இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.
இந்நிலையில் கே.எல்.ராகுல் நேற்று ஆடிய விதம் குறித்து ரோகித் சர்மா புகழ்ந்து கூறியுள்ளார்.
‘முதல் பந்தில் இருந்தே தனது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார் ராகுல். முதல் நாள் ஆட்டம் முடியும்வரை கட்டுக்கோப்பாகவே செயல்பட்டார். அவர் எந்த நேரத்தில் அதிகம் யோசிக்கவோ, குழப்பமடையவோ இல்லை. தனது திட்டத்தில் அவர் தெளிவாக இருந்தார். நீங்கள் உங்கள் திட்டத்தில் சரியாக இருந்தால், உங்கள் திட்டத்தை நம்பி னால், அது கண்டிப்பாக சிறப்பாகவே முடியும். நான் பார்த்ததிலேயே, கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டம் இதுதான். என்னைப் பொறுத்தவரை, எனக்கும் சவாலாகவே இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்துவிட்டேன்’ என்று தெரிவித் துள்ளார்.









