பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் ரூ.3 குறைக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்போம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. எப்போதும் இல்லாத அளவாக 1,00 ரூபாயைத் தாண்டி தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலையை தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை என்று கூறி அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் திமுகவுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தின. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் ரூ.3 குறைக்கப்படுகிறது என்று தெரிவித்தார். அத்துடன், பெட்ரோல் மீதான வரி குறைப்பால், அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறினார்.இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் வரி குறைப்பு அமலுக்கு வரும் என்று நிதித் துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலாகிறது.






