ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சினிமா உலகின் மந்திரகாரன் என்று புகழப்படும் நோலன் படத்தின் சிறு அப்டேட்டும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Following படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நோலன், தொடர்ந்து வெளியான தனது படங்கள் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். இயற்பியல் விதிகளில் தொடங்கி விண்வெளியின் கருந்துளை வரை தனது படங்கள் வாயிலாக இயற்பியல் வகுப்பெடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.
பஞ்சாங்கத்தைக் கொண்டு ராக்கெட் விட்டதாக சில சினிமா பிரபலங்கள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், விண்வெளி சார்ந்த தனது படத்திற்கு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களை உடன் வைத்து திரைக்கதை அமைத்து நம்மையும் விண்வெளிக்கே அழைத்து சென்றவர். இவர் இயக்கத்தில் வெளியான இன்டெர்ஸ்டெல்லர் விண்வெளி சார்ந்த படங்களில் காலத்தால் அழியாதது.
இந்நிலையில், நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அத்துடன் அண்மையில் வெளியான இப்படம் உலகம் முழுவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ13.50 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.







