உள்நாட்டில் ரூ.29,000 கோடிக்கு தளவாடங்கள் வாங்க அனுமதி

உள்நாட்டு ராணுவத் தளவாடங்களை ரூ.29,000 கோடிக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை முடிந்தமட்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரப்படுத்தி வருகிறது.…

உள்நாட்டு ராணுவத் தளவாடங்களை ரூ.29,000 கோடிக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை முடிந்தமட்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கான கூட்டத்தில், ரூ.28,732 கோடியில் தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில், முப்படைகளின் தளபதிகள், ராணுவ செயலாளர், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆளில்லா விமானங்கள், குண்டு துளைக்காத கவச உடைகள் உள்ளிட்ட ரூ.28,732 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய வகை ஆயுதங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களிடம் இருந்து அவற்றை வாங்கும் நடவடிக்கையில் இது ஒரு முக்கிய முடிவு என தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகம், இது தற்சார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் முயற்சி என குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.