இந்தியா மொழிகளின் பொக்கிஷம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதில் குரல் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில், அவர் இன்று மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நமது நாடு பல மொழிகள், எழுத்துக்கள் மற்றும் பேச்சுவழக்குகளின் வளமான பொக்கிஷமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு உடைகள், உணவு வகைகள் மற்றும் கலாசாரங்கள் நமது தனிச்சிறப்பு. ஒரு தேசமாக, இந்த பன்முகத்தன்மை நம்மை பலப்படுத்துகிறது மற்றும் நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது என்றார் மோடி.
மேற்கு வங்காளத்தின் புருலியாவில் உள்ள சிதோ-கானோ-பிர்சா பல்கலைக்கழகத்தில் சந்தாலி மொழியின் பேராசிரியரான ஸ்ரீபதி டுடுவை பிரதமர் குறிப்பிட்டார். “அவர் (துடு) சந்தாலி சமூகத்திற்காக நாட்டின் அரசியலமைப்பின் பதிப்பை தனது சொந்த ‘ஓல் சிகி’ எழுத்தில் தயாரித்துள்ளார். நமது அரசியலமைப்பு நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒருவரின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி தெரியப்படுத்துகிறது என்று ஸ்ரீபதி துடு வலியுறுத்துகிறார்,” என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடி ஜப்பான் பயணம் குறித்தும் பேசினார். சில தினங்களுக்கு முன் நான் பல வேலைகளுக்கு நடுவே ஜப்பான் சென்றிருந்தேன். அப்போது சில அருமையான நபர்களை சந்தித்தேன் என்றார். யோகா தினம் குறித்து அவர் பேசுகையில், “ஜூன் 21ம் தேதி யோகா தினம் ஆகும். இந்த ஆண்டு மனிதத்துக்காக யோகா என்பதே கருத்துரு ஆகும். நீங்கள் அனைவரும் யோகா தினத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தினசரி வாழ்க்கைக்கு யோகாவையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று மோடி பேசினார்.








