75வது சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு விடுதலை பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் இந்த கொண்டாட்டங்கள் பின்பற்றப்பட்டன.
இதன் தொடக்கவிழாவாக குஜாராத்தில் தண்டி யாத்திரை செல்லும் நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றன. 75 கடற்கரைகளை சுத்தம் செய்தல், போன்ற பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக ஹர்கர் திரங்கா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்களுக்கு வீடுகளில் மூவர்ண கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.







