மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் உள்ளிட்ட 14 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா, பெங்களூரைத் தொடர்ந்து INDIA கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது INDIA கூட்டணியின் 14 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டது.
அந்த குழுவில் இடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:
- கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்)
- சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்)
- டி.ஆர்.பாலு (திமுக)
- ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்சா)
- சஞ்சய் ராவத் (சிவசேனா)
- தேஜஸ்வி யாதவ் (ராஷ்டீரிய ஜனதா தளம்)
- அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்)
- ராகவ் சத்தா (ஆம் ஆத்மி)
- ஜவாத் அலி கான் (சமாஜ்வாதி)
- லாலன் சிங் (ஜக்கிய ஜனதா தளம்)
- டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
- உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி)
- மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி)
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி
அதோடு இந்தியா கூட்டணி சார்பாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
- INDIA கூட்டணி கட்சிகளாகிய நாங்கள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். தொகுதி பங்கீட்டை பொருத்தவரை அதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட்டு கூடிய விரைவில் முடிக்கப்படும்.
- INDIA கூட்டணி சார்பில் பொதுமக்கள் மீதான அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்தி எடுத்துரைக்க முடிவு
- தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலமாக பிரச்சாரங்களை ஒருங்கிணைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







