சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயல்பான அளவை விட 94% கூடுதல் மழைப்பொழிவு பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 1901-ம் ஆண்டு அதாவது கிட்டத்தட்ட 122 ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிக வறட்சியான மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் இயல்பான அளவை விட 94% கூடுதல் மழைப்பொழிவு அதாவது 259.4 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக நாட்டில் பருவமழை மிக மோசமாக பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தென்மேற்குப் பருவமழை அண்டை மாநிலங்களில் மழைப் பொழிவு குறைவாக இருந்த வேளையில், தமிழ்நாட்டில் நல்ல மழைப்பொழிவை அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக அடுத்த இரண்டு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வார இறுதியில் சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல், சென்னையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை பதிவாகியிருந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 239.9 மி.மீ. மழையும் (76% கூடுதல் மழை), செங்கல்பட்டு மாவட்டத்தில் 107.3 மி.மீ. மழையும் (16% குறைவு), காஞ்சிபுரத்தில் 158.5 மி.மீ. மழையும் (12 சதவிதம் அதிகம்) பதிவாகியுள்ளது.







