இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவும் 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியாக விளடியாடிய ஹெட் 33 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க வார்னருடன் மார்ஷ் உடன் இணைந்தார். மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 30 ரன்களும் சுப்மன் கில் 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். விராட் கோலி 54 ரன்களும் கே.எல்.ராகுல் 32 ரன்களும் எடுத்தனர்.
அண்மைச் செய்தி: தொடங்கியது ‘காந்தாரா 2’ எழுத்து பணிகள் – மாஸ் அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி
பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஹ்ர்திக் பாண்டியா 40 ரன்களும் ஜடேஜா 18 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் 49.1 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கோப்பையை கைப்பற்றியது.







