ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று வெற்றி பெற்றது. நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய இந்திய அணி 127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினர். சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் தலா 81 ரன்கள் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 52 எடுத்தார்.
தொடர்ந்து இலக்கை விரட்டி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரரான மானவ் சுதார் சிறப்பாக விளையாடினார். மானவ் சுதார் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்தார். இதில் 10 மெய்டன்களும் அடக்கம்.
பாலோ ஆன் ஆனதால் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மானவ், 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மானவ் சுதார் ஆட்டநாயகன் விருது வென்றார்.




