சூர்யா, கோலி அசத்தல்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா த்ரில் வெற்றி..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் மோதியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி…

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் மோதியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது டி-20 போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியை வென்றால் தான், தொடரை கைப்பற்ற முடியும் என்பதால் இரு அணிகளும் உத்வேகத்துடன் களமிறங்கினர்.

டாஸ் வென்ற இந்திய அணி பெளலிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் அக்ஸர் பட்டேல், சஹால் சிறப்பாக பந்து வீசினர். அக்ஸர் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். குறிப்பாக பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் பந்துவீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சிதறவிட்டனர். க்ரீன் மற்றும் டிம் டேவிட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர்கள் ராகுல், ரோஹித் அடுத்ததுடுத்து அவுட்டாகினர். பிறகு கோலி மற்றும் சூர்யகுமார் இணைந்து ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை விளாசினர். கோலி சற்று பொறுமையாக ஆட, சூர்யகுமார் வழக்கம்போல அதிரடி காட்டினார். அவர் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் கோலியும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசியில் ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடி காட்ட, ஒரு பந்து மீதமிருக்கையில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகவும், அக்ஸர் பட்டேல் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனிடையே பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஓவரை, ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் ஒரே ஆண்டில் டி-20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா பெற்றுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.