அதிகரிக்கும் குழந்தையின்மை – காரணங்களும் தீர்வுகளும்

குழந்தையின்மை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இளம் தம்பதிகளிடையே மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 100 தம்பதிகளுக்கு 5 பேருக்கு இருந்த குழந்தைப்பேறின்மை இப்போது 20 ஆக அதிகரித்துள்ளது. நெருக்கடிமிக்க வாழ்க்கை, காலதாமதமான திருமணம்,…

குழந்தையின்மை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இளம் தம்பதிகளிடையே மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 100 தம்பதிகளுக்கு 5 பேருக்கு இருந்த குழந்தைப்பேறின்மை இப்போது 20 ஆக அதிகரித்துள்ளது.

நெருக்கடிமிக்க வாழ்க்கை, காலதாமதமான திருமணம், உடல் எடை அதிகரிப்பு, உடலுக்கு தீங்கு விளைவுக்கும் உணவுகளை சாப்பிடுதல், புகை, மது, போன்றவைகளே முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. திருமணமான ஓரிரு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பிறக்காவிட்டால் அந்த தம்பதியை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனநிலையே இப்போதும் நீடிக்கிறது. உண்மையிலேயே அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமிருந்து, ஓரிரு ஆண்டுக்குள் குழந்தை பிறக்காவிட்டால், நிச்சயம் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சாமுண்டி சங்கரி. எனவே கருவுறாமைக்கான காரணம் என்ன? இதில் தம்பதிகளின் பங்களிப்பு என்ன? எப்போது மருத்துவமனை அணுக வேண்டும்? கருவுறாமைக்கான தீர்வுகள் என்ன ? மகப்பேறு மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களின் விளக்கங்கள் இதோ…

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

மனமகிழ்வுடன் ஒற்றுமையாக வாழும் தம்பதியர், கருவுறாமையே குழந்தை இன்மைக்கு மிகப்பெரிய அறிகுறியாகும். இதைவிட வேறு எந்த காரணமும் மருத்துவரை அணுகத் தேவையில்லை. என்றாலும் திருமணமான பெண்களும் ஆண்களும் எப்போது குழந்தைப்பேறின்மைக்கான மருத்துவரை அணுக வேண்டும் என்பதைப் பார்ப்போம்…

திருமணமான பெண்கள்

• 35 வயது அல்லது அதற்கு மேலிருந்து, 6 மாதங்களுக்கு மேலாக முயன்றும் கருவுறாதவர்
• 40 வயதுக்கு மேல் குழந்தையின்றி இருப்பவர்கள்
• மிகவும் வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி காலத்தைக் கொண்டவர்
• முறையற்ற அல்லது அதிக இடைவெளிவிட்டு பீரியட் உள்ளவர்
• பெலோப்பியன் குழாயில் அடைப்பு உள்ளவர்
• PCOS (Polycystic Ovarian Disease Syndrome) அதாவது சினைப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றுவது
• பலமுறை அபார்ஷன் ஆனவர்
• புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவராக இருந்தால். 

 

திருமணமான ஆண்கள்

• விந்தணு எண்ணிக்கை குறைவாகவும் அது தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்
• பாலியல் நோய் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்
• புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்
• சிறுநீரக (விரை) வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்
• குடும்பத்தில் குழந்தையின்மை பிரச்னை தொடர்ச்சியாக உள்ளவராக இருந்தால்…

இத்தகைய பிரச்னைகளைக் கொண்டவராக திருமணமான ஆண்களும் பெண்களும் இருந்தால், குழந்தைப்பேறு வேண்டுவோர் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாமுண்டி சங்கரி.
திருமணமான பெண்கள் கருவுறாமைக்கான காரணங்கள், இதில் ஆண்களின் பங்களிப்பு, தீர்வுகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி இனி  பார்ப்போம்…

மருத்துவர்கள் முன்வைக்கும் தீர்வுகள்…

குழந்தையின்மை தீர்க்க முடியாதது என்றில்லை. பல்வேறு வியூகங்கள், செயல்பாடுகள் மூலமாக குழந்தையின்மையை போக்கலாம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். அதற்கு தம்பதியராக இருந்தால், கருமுட்டை அதிகம் உருவாகக் கூடிய காலத்தில், தம்பதி உறவு வைத்துக்கொள்வது அவசியம். அப்போது தான் கருவுறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இதையும் படிங்க – குழந்தையின்மைக்கு வருகிறது தீர்வு

ஆண்களுக்கான வழிகாட்டுதல்

திருமணமான ஆண்கள் போதைப்பொருட்களை தவிர்க்க வேண்டும். புகை, புகையிலை, மது போன்ற போதைப்பொருட்கள் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிவிடுகின்றன. அதிகம் சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அது விந்தணு உற்பத்தியையும் அதன் ஓட்டத்தையும் குறைத்துவிடுகிறது. தொழிற்சாலை மாசுகள், அதிக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல், அதிக உடற்பயிற்சி போன்றவையும் ஆண்களின் விந்தணு உற்பத்தியைக் குறைத்துவிடுகிறது. 

பெண்கள் வழிகாட்டுதல்

திருமணமான பெண்கள் அதாவது குழந்தைப் பேறுக்கு தயாராவோர், புகை, புகையிலை, மது போன்ற போதைப்பழக்கங்கள் இருந்தால் அவற்றை தவிர்த்துவிடுதல் அவசியம். காபி அதிகம் குடிப்பவராக இருந்தால் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக எடை இருந்தாலும், எடை மிகவும் குறைந்தவராக இருந்தாலும், அதிக உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் கருவுறுதல் தள்ளிப்போகும். ஆகவே இதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சாமுண்டி சங்கரி.

மழலைச் சத்தம் கேட்கட்டும்!

பணம் கொழிக்கும் மையங்களாக செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகள் மாறி வருகின்றன. மாநகரங்களில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அதிகரித்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் சிறு நகரங்களில் கூட கருத்தரித்தல் மையங்கள் தொடங்கப்படக் கூடும் என்று மருத்துவ வல்லுர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே பணத்தைக் கொடுத்து, உடலைக் கெடுத்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதை விட, திருமணமான தம்பதிகள், மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி, இயற்கையாகவே இல்லத்தில் மழலைச் சத்தம் கேட்டு, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவோம்.
-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.