சென்னை காசிமேடு சந்தையில் மீன்களின் வரத்து அதிகரிப்பு: அதிகாலையில் களைகட்டிய விற்பனை..!

விடுமுறை தினத்தையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை களைகட்டியது. ஞாயிற்று கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால், காசி மேடு மீன்பிடித் துறைமுகத்தில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் குவியத் தொடங்கினர்.…

விடுமுறை தினத்தையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை களைகட்டியது.

ஞாயிற்று கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால், காசி மேடு மீன்பிடித் துறைமுகத்தில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் குவியத் தொடங்கினர். ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று கரைக்கு திரும்பி வந்த நிலையில் , பெரிய மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, திருக்கை உள்ளிட்ட பெரிய மீன்களின் வரத்தும், அவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இருந்தும் அசைவ பிரியர்களின் அதிகமான வருகையால் மீன்களின் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

தங்களுக்கு தேவையான மீன்களை விலையையும் பொருட்படுத்தாது, மீன் பிரியர்கள் வாங்கிச் சென்றனர். இதே போன்று சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை விலையில் மார்க்கெட் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக மீனவ பெண்கள் ஏலமுறையில் மீன்களை வாங்குவதற்காக கூடியிருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து மீன்களை வாங்கிச்சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வஞ்சிரம் கிலோ 800 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் , வவ்வாள் கிலோ 600 முதல் 700 ரூபாய் வரையிலும் , சங்கரா கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையிலும், தோல் பாறை கிலோ 350 முதல் 500 ரூபாய் வரையிலும், நெத்திலி கிலோ 250 முதல் 300 ரூபாய் வரையிலும், வெள்ளை ஊடான் கிலோ 150 ரூபாய்க்கும், காரப்பொடி கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையானது. அதே போல் நவரை, காணா கந்தை, இறால் மற்றும் நண்டு போன்றவை கிலோ 300 ரூபாய் வரையிலும் விற்பனையானது. வியாபாரிகள் மற்றும் அசைவ பிரியர்கள் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.