முதியோர் உதவித் தொகை ரூ.1200 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் குறித்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதேபோல 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மற்றும் ஆளுநரின் செயல்பாடு, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
- முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்படும்.
- ஜூலை 25ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான முகாம் நடத்தப்படும்.
- தமிழ்நாடு முழுவதும் 35,925 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
- இதன் மூலம் 30.55 லட்சம் பயனாளிகள் பயனடைகின்றனர். இதனால் ரூ.845.91கோடி கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும்.
- தொழிலாளர் துறையின் கீழ் உள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் உள்ளவர்களும் இதில் பயன்பெறுவர் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.







