பெண்களை பாதுகாப்பதில் ராஜஸ்தான் அரசு தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்த அந்த மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா பங்கேற்று பேசினார். அப்போது பெண்கள் பாதுகாப்பில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். மணிப்பூருக்கு பதிலாக ராஜ்ஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளதை நாம் முதலில் பார்க்க வேண்டும் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து அவரின் அமைச்சர் பதவியை பறித்து முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டார். இதற்கு பாஜக எம்.பி ராஜ்யவர்தன் ராத்தோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : “ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் உண்மையை பேசியுள்ளார். மற்ற மாநிலங்களின் சம்பவங்களை விமர்சிப்பதற்குப் பதிலாக, சொந்த மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களைப் பற்றி அரசு கவனிக்க வேண்டும், கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதல் மாநிலமாக உள்ளது” என ராத்தோர் கூறியுள்ளார்.







